×

வங்கியை நாங்க வாங்கிட்டோம் ரூ.36 லட்சம் இப்போ கட்டு… விவசாயியை மிரட்டும் சென்னை தனியார் நிறுவனம்

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அணைக்கட்டு அடுத்த நேமநந்தபுரம் கிராமத்தை சேர்ந்த அரசு என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வாங்க, வேலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ரூ.5.15 லட்சம் கடன் வாங்கினேன். அப்போது முன்பணமாக ரூ.40 ஆயிரம் கட்டினேன். பின்னர் மாத தவணையாக ரூ.2.20 லட்சம் வரை கட்டினேன். அதற்கு பிறகு என்னால் தவணை பணம் கட்ட முடியவில்லை. இதனால் வங்கி மேலாளர் எனது வீட்டிற்கு வந்து, நான் இல்லாதபோது டிராக்டரை எடுத்து சென்றுவிட்டார். வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோது, டிராக்டரை விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் நான் கட்டிய பணம், டிராக்டரை விற்பனை செய்த பணமும் வாங்கிய கடனுக்கு சரியாகிவிட்டதாக கூறி என்னை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நான் கடன் வாங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை இப்போது விலைக்கு வாங்கி விட்டதாகவும், டிராக்டர் கடனுக்கான அசல், வட்டி ஆகியவை ரூ.36 லட்சம் ஆகிவிட்டதாகவும், கடனை தங்களிடம் கட்டவேண்டும் என அடிக்கடி செல்போனில் பேசி தொல்லை தருகின்றனர். அதோடு கடனை கட்டாவிட்டால் அடியாட்களை வைத்து என்னை தூக்கிக்கொண்டுபோய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி என்னுடைய நிலத்தை விற்பனை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வங்கியை நாங்க வாங்கிட்டோம் ரூ.36 லட்சம் இப்போ கட்டு… விவசாயியை மிரட்டும் சென்னை தனியார் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vellore ,Vellore Collector ,Collector ,Kumaravelpandian ,Dinakaran ,
× RELATED 17 வயது வீராங்கனையை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர் கைது