![]()
புதுடெல்லி: மக்களவையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தனிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக இருந்த மஹுவா மொய்த்ரா மீது பாஜ எம்பி நிஷாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மஹுவாவின் எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் கடந்த 8ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், எம்பி பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
The post எம்பி பதவி பறிப்பு விவகாரம் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.
