×

சொத்து தகராறில் நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம்: சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், காந்தபாளையம் வட்டம் சீயனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி ராஜேஸ்வரி. இவர், தன் கணவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் வட்டம், காட்ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டுமனையை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வராண்டாவில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த அவர், உடன் எடுத்துவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த ஜெயராமன் மனைவு ராஜேஸ்வரி கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் வட்டம் காட்ராம்பாக்கம் கிராமத்தில் என் கணவருக்கு 10 கிரவுண்டு வீட்டுமனை உள்ளது. இந்த இடத்தை முதலில் 1 கிரவுண்டு இடத்தை புரோக்கர் ராஜேஷ் மூலம் விஜய் என்பவர் ரூ.13 லட்சத்திற்கு வாங்கினார். அதற்கான பணம் கொடுக்கவில்லை. இந்நிலையில், 10 கிரவுண்டு இடத்தையும் விஜய், அருளானந்த பார்த்திராஜ் ஆகிய 2 பேர் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு பெரும்புதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பணத்தை கேட்டால் மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது என மோசமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post சொத்து தகராறில் நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...