×

மெக்கானிக் கடையில் விடப்பட்ட மொபட்டில் தஞ்சமடைந்த 7 அடி நல்லபாம்பு மீட்பு

புழல்: பழுது நீக்கம் செய்வதற்காக மெக்கானிக் கடையில் விடப்பட்ட மொபட்டில் பதுங்கியிருந்த 7 அடி நீள நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
புழல் வினாயகபுரம், பத்மாவதி நகர், பிரதான சாலையில் சரவணன் என்பவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் புழல் பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக தண்ணீரில் மூழ்கிய ஏராளமான பைக்குகள், சரவணனின் கடைக்கு சர்வீஸ் செய்வதற்கு கொண்டு வந்து விடப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு மொபட்டை பழுது நீக்குவதற்காக சரவணன் மற்றும் ஊழியர்கள், அந்த மொபட் சீட்டை தூக்கிவிட்டு பழுது நீக்கும் பணியை மேற்கொள்ள முயன்றனர். அப்போது மொபட்டின் முன் பகுதியில் இருந்து ‘உஷ்… உஷ்…’ என்று சத்தம் கேட்டுள்ளது. அதனை கண்டுகொள்ளாத ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மொபட்டின் உள்ளே ஒரு பாம்பு இருப்பது தெரிந்தது. அதனைப் பார்த்ததும் ஊழியர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து, கடை முன்பு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குறிப்பிட்ட அந்த மொபட்டின் முன்பகுதியை கழற்றி சோதனை செய்தனர். அப்போது, அதில் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதை பையில் அடைத்து, அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

 

The post மெக்கானிக் கடையில் விடப்பட்ட மொபட்டில் தஞ்சமடைந்த 7 அடி நல்லபாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...