பூந்தமல்லி: பூந்தமல்லியில் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து போர்க்கால அடிப்படையில் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டதால், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இருப்பினும் பூந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி இருந்தது. இதனால், இப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதற்கிடையே பூந்தமல்லி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் மற்றும் பூந்தமல்லியில் மழைநீர் தேங்கி விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை, அதிக திறன்கொண்ட மின்மோட்டார்கள் மூலம் உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் தர், ஆணையர் லதா, நகர திமுக செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.அதேபோல், வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது. மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி நேரில் ஆய்வு செய்து, உடனடியாக மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, அங்கு மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
The post பூந்தமல்லியில் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் மழைநீர் அகற்றும் பணி: அமைச்சர் மூர்த்தி ஆய்வு appeared first on Dinakaran.
