×

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சேதமடைந்த 3,433 வாகனங்கள் பழுதுநீக்கம் : 1,000 வாகனங்களுக்கு இழப்பீடு போக்குவரத்து துறை தகவல்

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த வாகங்களில் கடந்த டிச.9ம் தேதிவரை 3,433 வாகனங்கள் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. அவ்வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத்தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த டிச.8ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாகனத்தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: அனைத்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு பழுதுநீக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் இன்ஜினை ஆன் செய்யாமல் மீட்பு வாகனங்களில் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டுவருமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாகன உரிமையாளர்களின் அலைபேசி எண்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளும், வாட்ஸ்அப் தகவலும் அனுப்பப்பட்டுள்ளன. டிவிஎஸ், ராயல் என்பீல்டு, மாருதி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும், நியூ இண்டியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும் இத்தகைய சிறப்பு முகாம்கள் குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியிட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரோட் சைட் அசிஸ்டன்ஸ் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. சென்னையில் மழை பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் டிசம்பர் 18 வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களிலும் வாகனங்களைப் பழுதுநீக்கம் செய்வதற்கு போதுமான அளவில் தொழில்நுட்பப்பணியாளர்கள் இல்லாததால் இதர மாவட்டங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் கொண்டுவருவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.20,000-க்கும் குறைவாக பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் வழங்கும் பாதிக்கப்பட்ட வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் பழுதுநீக்கப்பட்டதற்கான ரசீதுகளின் அடிப்படையில் உடனடியாக அந்த இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இழப்பீட்டை ஆய்வுசெய்வதற்கு பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் சர்வேயர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பிற மாவட்டங்களிலிருந்து சர்வேயர்கள் வரவழைக்கவும் காப்பீட்டு நிறுவனங்கள் விரிவான நடவடிக்கை எடுத்துவருகின்றன.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்களில் காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ன. வாகனங்களை கொண்டு வருவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 2,080 மீட்பு வாகனங்களின் விவரங்களும் அதன் உரிமையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களும், எந்த வட்டாரப்போக்குவரத்து அலுவலரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று அலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. நிதித்துறை, தொழில்துறைய, உள்(போக்குவரத்து) துறையும் இணைந்து, விரைந்து எடுத்த நடவடிக்கை காரணமாக 3,433 வாகனங்கள் கடந்த டிச.9ம் தேதி வரை பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு சக்கர வாகனங்கள் 1,683, மூன்று சக்கர வாகனங்கள் 322, இரு சக்கர வாகனங்கள் 1,428 ஆகும். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு செட்டில்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது விரைவுபடுத்தப்படும் என காப்பீட்டுநிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இதுவரை நான்கு சக்கர வாகனங்கள் 243, மூன்று சக்கர வாகனங்கள் 25, இரு சக்கர வாகனங்கள் 324 என 598 வாகனங்கள் மீட்பு வாகனங்கள் மூலம் பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களிலும் நிவாரணப்பணிகளுக்காக வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக 548 வாகனங்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி கேட்டதன் பேரில் கூடுதல் எண்ணிக்கையில் பல்வகை வாகனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களின் செய்திக்குறிப்புகள் போக்குவரத்து ஆணையரக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதையும் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாகனத் தயாரிப்பு நிறுவனங்களோ அல்லது முகவர்களோ, காப்பீட்டு நிறுவனங்களோ பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு இடம் தேவைப்படும் பட்சத்தில் தகுதியான அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்களைத் தற்காலிகமாக வழங்குவதற்குத் தயாராக உள்ளது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இதை முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை பழுதுநீக்கம் செய்வதற்கும் காப்பீட்டு தொகைகளுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ஒப்படைக்கப்பட்ட இடத்தை தொடர்புடைய அரசு துறைகள் மீண்டும் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளும். வாகன உரிமையாளர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களில் இன்ஜினை எக்காரணம் கொண்டும் இயக்க கூடாது. நிறுவனங்களுக்கோ அல்லது டீலர்களுக்கோ, கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொண்டால் அவர்கள் மீட்பு வாகனங்களில் வந்து வாகனத்தை எடுத்துச்சென்று பழுதுநீக்கம் செய்து தருவார்கள். இத்தகைய நிகழ்வுகளில் பெரிய அளவில் பழுது நீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்படாது. மாறாக வெள்ள நீரில் முழ்கிய வாகனங்களை இயக்கும்பட்சத்தில் அது மிகப்பெரிய பழுதுநீக்கத்திற்கும் அதிக செலவினத்திற்கும் வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை சரிசெய்வதற்கான நாட்களும் அதிகமாகும்.

வாகனங்களின் பாதிப்பின்தன்மை மற்றும் வாகன பதிவு எண் தெளிவாக தெரியும்படி புகைப்படங்களை எடுத்து காப்பீடு கோரும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அந்தந்த பகுதியிலேயே இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அக்கீகரிக்கப்படாத மெக்கானிக்குகளிடம் சிறிய அளவில் பழுதுநீக்கம் செய்யப்பட்டிருந்தால் வாகனத்தின் பதிவு எண், பதிவுச்சான்றிதழில் உள்ளபடி வாகன உரிமையாளரின் பெயர், தேதி மற்றும் பழுதுநீக்கம் செய்யப்பட்ட விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். வாகனத்தின் தயாரிப்பு நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் நடத்தும் சிறப்பு மற்றும் நடமாடும் பழுது நீக்கும் மையங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சேதமடைந்த 3,433 வாகனங்கள் பழுதுநீக்கம் : 1,000 வாகனங்களுக்கு இழப்பீடு போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Migjam ,Mikjam ,
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரணம்:...