×

தேங்கிய மழை நீர் மூலம் கெரடோலிசிஸ் உள்ளிட்ட தோல் வியாதிகள் வர வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

 

சென்னை: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர் மூலம் கெரடோலிசிஸ், செல்டிஸ் உள்ளிட்ட தோல் வியாதிகள் உண்டாக வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் 2 நாளாக தேங்கி கிடந்தது. தேங்கி இருந்த மழைநீரில் கழிவுநீரும் கலந்ததால் கிருமித் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், உணவு, பால், தண்ணீருக்காக வெளியே அலைந்து திரிந்தவர்களுக்கும் தண்ணீரில் ஊறி ஊறி காலில் உள்ள தோலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக காலில் அரிப்பு, சேற்று புண் (கால் விரல் இடுக்கில் வருவது), கெரடோலிசிஸ் (பாதத்தில் சிறு குழி குழியாக வருவது), செல்டிஸ்( காலில் தோல் உரிந்து சிவப்பாக மாறுவது) நோய் உள்ளிட்ட தோல் சார்ந்த வியாதிகளும் உண்டாகும். வெள்ள பாதிப்பு அடைந்த பகுதியில் அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அங்கு தோல் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவேரி மருத்துவமனை டாக்டர் கவிதா சுந்தரவதனம் கூறியதாவது: இந்த வெள்ளம் என்பது இயற்கையாக நடந்தது.

இதனால் யாருக்கு வேண்டுமானாலும் சேற்று புண்,கெரடோலிசிஸ் தோல் நோய் ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதுதான். சிலருடைய கால்களில் வெடிப்புகள் இருக்கும். அதன் வழியாக கிருமிகள் சென்று உடலுக்கு பல்வேறு விதமான உபாதைகள் வரலாம். குறிப்பாக மழைக்காலத்தில் வேறு வழி இல்லாமல் தேங்கிய மழைநீரில் சென்று வரும் நிலைமை இருக்கும் போது செல்டிஸ் நோய் ஏற்படலாம். இதனால் கால் வீக்கம், கால் சிவப்பாக மாறுவது போன்றவை ஏற்படும். இதற்கு முறையாக ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுக்க வேண்டும். சிகிச்சை எடுக்கவில்லை என்றால் அது தீவிர பாதிப்பாக மாறி விடும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்களில் மாற்றம் ஏற்பட்ட உடன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். தற்போது ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே ஷு, சாக்ஸ் உள்ளிட்டவற்றை நன்றாக காய வைத்து பயன்படுத்த வேண்டும். தேங்கியுள்ள மழைநீரில் சென்று வந்த பிறகு நன்றாக வீட்டில் சுடு நீரால் கால்களை கழுவவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேங்கிய மழை நீர் மூலம் கெரடோலிசிஸ் உள்ளிட்ட தோல் வியாதிகள் வர வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...