×

பூந்தமல்லியில் மழைநீர் அகற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

 

பூந்தமல்லி, டிச. 10: பூந்தமல்லியில் மழைநீர் அகற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயலால் பெய்த மழையால், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் 22 டிராக்டர்கள், 48க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மற்றும் ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நகராட்சி பணியாளர்கள், பூந்தமல்லியின் பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளிலும் துப்புரவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, நகர திமுக செயலாளர் திருமலை, நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் தர், ஆணையர் லதா, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர் மன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண்மை துறை செயலாளர் மழை வெள்ளப்பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் சங்கர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை முழங்கால் அளவு தண்ணீரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக பூந்தமல்லி காவல் நிலையம், மேல்மாநகர், கரையான்சாவடி, குமணன்சாவடி, கண்டோன்மெண்ட், எஸ்பி அவென்யூ, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். இதற்கிடையே மழைநீர் வடிந்த பகுதிகளில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தெளிப்பது ஆகிய பணிகளை ஒவ்வொரு வார்டிலும் சென்று நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் துணை தலைவர் தர், ஆணையர் லதா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு பால், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பூந்தமல்லி நகராட்சியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிய தொடங்கி மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பூந்தமல்லியில் மழைநீர் அகற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Shankar ,Mikjam ,Dinakaran ,
× RELATED குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்கள்...