×

நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ காப்பீடு தொகை வழங்க மறுக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: ‘ காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்கக்கூடாது’ என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையை சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து 2010ல் ஓய்வு பெற்றேன். அரசின் ஓய்வூதியம் பெற்று வருகிறேன். ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கேன்சரால் நான் பாதிக்கப்பட்டதால் சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் 3.04.2016 முதல் 9.04.2016 வரை இடது சிறுநீரகக் கட்டி புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். இதற்காக ரூ.1.2 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்தினேன். அதனைத்தொடர்ந்து மருத்துவ செலவுக்கான காப்பீடு தொகை கோரி விண்ணப்பம் செய்தேன். தங்களது நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், காப்பீடு பெற தகுதி இல்லை என்று கூறி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் என்னுடைய கோரிக்கையை நிராகரித்தது. நெட்வொர்க் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே மருத்துவக் காப்பீடு தொகை வழங்கப்படும் என கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனக்கு காப்பீடு தொகை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் கணபதி சுப்ரமணியம் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,’சிகிச்சை எடுத்த மருத்துவமனை காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலின் கீழ் வரவில்லை என்ற காரணத்திற்காக காப்பீடு தொகையை வழங்காமல் இருக்க கூடாது. தற்போதைய வழக்கில், மனுதாரர் எடுத்த சிகிச்சையின் உண்மைத்தன்மை மறுக்கப்படவில்லை. சிகிச்சை உண்மையானது என கண்டறியப்பட்டவுடன், மனுதாரரின் மருத்துவ கோரிக்கையை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. எனவே, ஓய்வூதியர் எடுத்து கொண்ட சிகிச்சைக்கு காப்பீடு வழங்க இயலாது என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 6 வாரங்களுக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டிய காப்பீடு தொகையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்,’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

 

The post நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ காப்பீடு தொகை வழங்க மறுக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,
× RELATED காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை...