×

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 3 குருவிகள் கைது

சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து சென்னைக்கு சர்வதேச கடத்தல் கும்பல், விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்சில் வந்த சென்னையைச் சேர்ந்த மஜித் ஷெரிப் (32), ஷபானா (30), மற்றொரு ஷபானா (34) ஆகிய 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சுற்றுலாப் பயணிகள் விசாவில் கடந்த வியாழக்கிழமை இரவு துபாய் சென்றவர்கள், உடனடியாக நேற்று அதிகாலை திரும்பியதும் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மூன்று பேரையும், அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது 2 பெண் பயணிகள் உள்பட 3 பேரின் உள்ளாடைகள் மற்றும் கைப்பைக்குள் இருந்த ரகசிய அறைகள், எலக்ட்ரிக் ஓவன், டிரில்லிங் மிஷின் ஆகியவற்றுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
3 பேரிடம் இருந்தும் 7.5 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி. தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து, சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் மூன்று பேருமே கடத்தல் குருவிகள் தான் என தெரியவந்துள்ளது. இவர்களை கடத்தலில் ஈடுபடுத்திய, சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய ஆசாமி யார், இவர்கள் இதேபோல் ஏற்கனவே தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 

The post சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 3 குருவிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dubai ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் துபாய் செல்ல...