×

கனமழையின்போது 1700 அழைப்புகள் மூலம் சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய 70 ஆயிரம் பேரை மீட்டுள்ளோம்: போலீஸ் கமிஷனர் பேட்டி

பெரம்பூர், டிச.9: சென்னையில் கனமழையின்போது காவல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 1700 அழைப்புகள் மூலம், வெள்ளத்தில் தவித்த 70 ஆயிரம் பேரை பத்திரமாக மீட்டுள்ளோம், என போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் குடும்பங்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கனமழையின்போது காவல் துறை சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதில் வந்த 1700 அழைப்புகள் மூலம், வெள்ளத்தில் தவித்த 70 ஆயிரம் பேரை பத்திரமாக மீட்டு, அவர்களுக்கு உண்டான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டன. வேளச்சேரியில் பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்புகளில் இருந்த வெள்ளநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. காவலர் குடும்பங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அதேபோல காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டு வருகிறது. காவலர்கள் கையில் இருந்து பொதுமக்களுக்கு செலவு செய்த பணமானது காவலர் நிதியிலிருந்து சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்கப்படும். மழை வெள்ளத்தில் பணியாற்றிய காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

தற்போது பெய்த மழையினால் பழுதடைந்து உள்ள போக்குவரத்து சிக்னல்கள் விரைவில் சரி செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் பலத்த மழை காரணமாக சென்னை மாநகரில் இதுவரை மழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழைக்காலங்களில் வாகனங்கள் தொலைந்தாலோ அல்லது வெள்ளத்தில் எங்கேயாவது அடித்துச் செல்லப்பட்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், இணை ஆணையர் அபிஷேக் திக்ஷித், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் செம்பேடு பாபு, அழகேசன், தமிழ்வாணன் மற்றும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

The post கனமழையின்போது 1700 அழைப்புகள் மூலம் சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய 70 ஆயிரம் பேரை மீட்டுள்ளோம்: போலீஸ் கமிஷனர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perambur ,
× RELATED மெட்ரோ நிர்வாக வாகன கண்ணாடிகளை உடைத்த 6 பேர் கைது!!