பள்ளிப்பட்டு, டிச.9: கனமழை காரணமாக குசா ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உடைந்து சேதமடைந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது நீர்நிலைகள் நிரம்பி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜகுப்பம் மற்றும் ஐ.வி.பட்டடை பகுதியில் குசா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் உடைந்து சேதமடைந்ததது.
இந்த பாலத்தை கடந்து தான் அருகாமையில ஆந்திர பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் தினசரி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்புகளை லாரி, டிராக்டர்களில் ஏற்றி செல்கின்றனர். தற்போது இந்த தரைப்பாலம் உடைந்துள்ளதால், பள்ளிப்பட்டு நகரத்தின் வழியாக சில மைல் தூரம் சுற்றி செல்வதால் காலதாமதம் ஏற்படுவதோடு பள்ளிபட்டு நகரத்தில் மிகுந்த வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விவசாயிகள் விளை பொருட்கள், இடு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கால்நடைகள் செல்வதற்கும், கல்லூரி, பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்கள் இந்த தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது இந்த தரைப்பாலம் உடைந்துள்ள நிலையில் விவசாயிகள் பொதுமக்கள் விரைவாக தற்காலிக தரைப்பாலம் கட்டி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு ஒன்றிய 1வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதியிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கினார்.
The post பள்ளிப்பட்டு அருகே குசா ஆற்றின் தரைப்பாலம் உடைந்தது: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
