×

மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் 23 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது: ஆய்வில் அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர், டிச.9: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறை மூலம் கணக்கெடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக 23 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1.10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஏரிப்பாசனம் மற்றும் மானாவாரியில் விவசாய சாகுபடி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர், பூண்டி, எல்லாபுரம், பூந்தமல்லி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் முப்போகம் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் மேற்குறிப்பிட்ட பகுதி கிராமங்களில் சம்பா பருவத்தில் 50750 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

எனவே இந்த மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெல் வயல்களில் மழைநீர் புகுந்து கதிர் பிடிக்கும் பருவத்தில் பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல், திருவள்ளூர் பகுதியில் சிறுவானூர், ராமஞ்சேரி, சென்றான்பாளையம், பூண்டி, ரங்காபுரம், ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவலாங்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு கிராமங்களில் நெல் வயல்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் பயிர்கள் கதிர் பிடிக்கும் பருவத்தில் நீரில் சாய்ந்துள்ளன. இதனால், நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர் கா.முருகன் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஒரு விவசாயிகள் விடுபடாமல் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளவும், விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறையினரும் இணைந்து கணக்கெடுப்பு பணிகள் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றிய கிராமங்களில் நெல் வயல்களில் களப்பணிகள் மேற்கொண்டுள்ளோம். இதுவரையில் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியுள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே சேதம் முழுமையாக தெரியவரும். தற்போதைய நிலையில் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெற்பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் மிக்ஜாம் புயல் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நீரில் மூழ்கி இருந்தால், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு, நீர் வடித்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சத்துடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து தண்ணீர் வடித்தவுடன் வயலில் இட வேண்டும்.

போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீணில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். முன்சம்பா பருவத்தில் நடவு செய்துள்ள நெற்பயிர் தண்டு உருளும் பருவம் முதல் பூக்கும் பருவத்தில் இருந்தால், ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

மழைக்காலத்தில் பூச்சிநோய் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 0.03 சதவீதம் மருந்தினை ஹெக்டருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேலும், ஆணைக்கொம்பன் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பரிந்துரை செய்யப்பட்ட அளவு தழைச்சத்து உரங்களை பயன்படுத்தவும். விளக்குப் பொறிகளை வயல்வெளிகளில் அமைக்கவும். தற்போது மேகமூட்டமாக உள்ளதால், பயிரின் தேவைக்கும் அதிகமாக இரசாயன உரமிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும், இது தொடர்பாக விவசாயிகளுக்கு தேவைப்படும் விவரங்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி ஆலோசனை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சூறாவளி காற்றால் சாய்ந்து சேதம் அடைந்தது. இதனால் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும், ஏக்கருக்கு ₹30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் புயல் உருவானால் நெற்பயிர்கள் சேதம் ஏற்படுவதும், அதற்கு இன்ஷூரன்ஸ் செய்து வருவதாகவும், ஆனால் பருவமழை காலங்களில் ஏற்படும் சேதத்திற்கு இதுவரை பயிருக்கான இழப்பீடு தொகை மற்றும் அரசு தரப்பில் அளிக்கும் நிவாரண உதவி தொகை ஆகியவை வந்து சேருவவதில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தமிழக அரசு முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணத் தொகை அளித்திட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் 23 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது: ஆய்வில் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Dinakaran ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...