×

வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் பணி சிறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

திருவள்ளூர், டிச.9: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் மற்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், யமுனா நகர், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் அந்த வெள்ளநீரை மோட்டார் மூலமாக விரைந்து வெளியேற்றும் பணிகளையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பகுதிகளை இன்று(நேற்று) ஆய்வு செய்ததில் இப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார்கள். ஒரு ஏரியிலிருந்து வரும் நீரானது மற்றொரு ஏரியை நிரப்புகிறது. இதில் சில வடிகால் வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டி உள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்படும் பட்சத்தில், நீர் விரயமாகாமல் முறையாக சென்றடையும். கண்டிப்பாக அதற்குரிய திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி துறை அலுவலர்கள் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

தூய்மை பணிகள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூரை பொறுத்தவரை நீர்நிலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு புயல் பாதிப்பால் ஏற்பட்ட பகுதிகளை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,பி.மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதின் அடிப்படையில் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், வேளாண்மை துறை சிறப்பு செயலாளர் பொ.சங்கர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் ப.பொன்னையா, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மதுரவாயல் எம்எல்ஏ க.கணபதி, கூடுதல் கலெக்டர் என்.ஒ.சுகபுத்திரா, செயற்பொறியாளர் ராஜவேல், ஆவடி காவல் துணை ஆணையர் அய்மன்ஜமால், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரூபேஷ்குமார் ஆகிேயார் கலந்து கொண்டனர்.

The post வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் பணி சிறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister I. Periyasamy ,Thiruvallur ,Villivakkam Panchayat Union ,Ayyappakkam ,Tiruvallur district ,
× RELATED வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு...