×

அதானியின் ரூ.13,000 கோடி முறைகேட்டை பற்றி கேள்வி கேட்ட திரிணாமுல் பெண் எம்.பி. பதவி பறிப்பு: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, கடும் கண்டனம்

புதுடெல்லி: அதானியின் ரூ.13 ஆயிரம் கோடி நிலக்கரி இறக்குமதி முறைகேடு பற்றி கேள்வி கேட்ட திரிணாமுல் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் அடிப்படையில் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரபல தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவாமொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டது. அதானி நிறுவனத்தில் ரூ.13 ஆயிரம் கோடி நிலக்கரி இறக்குமதி தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி எழுப்பினார். ஆனால் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப தொழில் அதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து ரூ.2 கோடி வரை மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய தள கணக்கை துபாயில் வசிக்கும் தொழிலதிபர் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மஹுவாவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை தலைவர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மக்களவை நெறிமுறைக்குழுவின் தலைவரும், பா.ஜ எம்பியுமான வினோத்குமார் சோன்கர் தலைமையிலான குழு முன் ஆஜர் ஆன மஹுவா பாதியிலேயே வெளியேறினார். அநாகரீகமான கேள்வியை எழுப்பியதால் வெளியேறிதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் மஹுவாவை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல்நாளிலேயே இந்த அறிக்கை பட்டியலிடப்பட்டது. ஆனால் அன்று தாக்கல் செய்யப்படவில்லை. நேற்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக பட்டியலிடப்பட்டது. நேற்று காலை மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கியவுடன், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேள்வி கேட்க பணம் வாங்கியது தொடர்பான புகாரில் மொய்த்ராவின் பதவியை பறிக்க பரிந்துரை செய்யும் அறிக்கையை குறிப்பிட்டார். அதற்கு சபாநாயகர் பிர்லா, இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அலுவல் முடிந்தவுடன் எம்.பி.க்களுக்கு பேச நேரம் கொடுப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அமளி நீடித்ததால், அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். 12 மணிக்கு அவை கூடியதும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும் நெறிமுறைகள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுபற்றி மஹுவா மொய்த்ரா பேச அனுமதி அளிக்கப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொய்த்ரா தனது கருத்தை சபையில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். 2005ம் ஆண்டில், அப்போதைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவின் பேரில், ‘கேள்விக்குப் பணம்’ பெற்றது தொடர்பான புகாரில் 10 மக்களவை உறுப்பினர்களை அவையில் பேச அனுமதிக்கவில்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில்,’ 2005ம் ஆண்டு அவை முன்னவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் 10 உறுப்பினர்களின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தை முன்வைத்தார்’ என்று கூறினார். இதை தொடர்ந்து மஹுவா மீதான அறிக்கை மீது மக்களவையில் விவாதம் நடந்தது. பின்னர் மஹுவாவின் நெறியற்ற நடத்தை காரணமாக அவரது எம்.பி பதவியை பறிக்கும் தீர்மானத்தை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில், தொழிலதிபரிடம் இருந்து பரிசுகள் பெற்றதும், சட்டவிரோதமான நடவடிக்கைக்காகவும் திரிணாமுல் எம்பி மஹுவா மக்களவை உறுப்பினராக நீடிக்க தகுதியற்றவர் என்று குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. அவர் செய்தது தவறான மற்றும் மிகவும் இழிவான செயலாகும். எனவே நெறிமுறை குழுவின் பரிந்துரை ஏற்று மஹுவா மொய்த்ரா மக்களவை உறுப்பினராக நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து திரிணாமுல் எம்பி மஹுவாவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதைக்கண்டித்து அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

* யார் இந்த மஹுவா?
மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா 1974 அக்.12ம் தேதி அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் லபாக் என்ற இடத்தில் தவிபேந்திரலால் என்பவருக்கு பிறந்தார். பெங்காலி இந்து பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கொல்கத்தாவில் உள்ள கோகலே மெமோரியல் பள்ளியில் படித்த அவர் அமெரிக்காவில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர். நியூயார்க், லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார்.
அரசியலில் நுழைவதற்காக 2009ல் லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் சேஸில் துணைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் இணைந்து ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். 2010ல், அவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2016ல் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் நாடியா மாவட்டத்தில் உள்ள கரீம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

* பா.ஜ முடிவின் ஆரம்பம்: மஹுவா ஆவேசம்
மக்களவைக்கு நேற்று காலை வந்த மஹுவா மொய்த்ரா கூறுகையில்,’ துர்கா தேவி வந்தாள். தற்போது நாம் பார்ப்போம். அழிவு வரும் போது முதலில் மனசாட்சி தான் அழிகிறது. அவர்கள் பாஞ்சாலியின் துயில் உரிதல் பணியை தொடங்கி விட்டனர். தற்போது மகாபாரத போர்க்களத்தை பார்ப்பீர்கள்’ என்றார். பதவியை பறித்த பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்களுடன் மக்களவையில் இருந்து வெளியேறிய மஹுவா மொய்த்ரா கூறுகையில்,’ என்னை பதவியில் இருந்து நீக்கியது பா.ஜ முடிவின் ஆரம்பம். எம்பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை. நெறி முறைகள் குழு ஆதாரம் இல்லாமல் செயல்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஒரு தார்மீக திசைகாட்டியாக செயல்படுவதற்காக அமைக்கப்பட்ட நெறிமுறைக் குழு, எதிர்க்கட்சிகளை புல்டோசர் கொண்டு தாக்கும் மற்றொரு ஆயுதமாக மாறியுள்ளது.

இந்த குழுவும், அறிக்கையும் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விதியையும் உடைத்துள்ளன. எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல் வந்த ஒரு பெண் எம்பியை அடிபணியவைக்க நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள்?. ஒரு தொழிலதிபரின் வணிக நலன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பதற்காக நான் பணம் பெற்றுக்கொண்டேன் என்று புகார்தாரர் கூறுகிறார். எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானிக்கு சம்மன் அனுப்பவில்லை. நான் பணம் வாங்கியதாக எந்தவித ஆதாரமும் காட்டப்படவில்லை. மக்களவை இணையதளத்தின் உள்நுழைவுச் சான்றுகளைப் பகிர்ந்து கொண்டேன் என்ற அடிப்படையில் மட்டுமே பதவியை பறித்துளளார்கள். உள்நுழைவுகளைப் பகிர்வதை நிர்வகிக்க எந்த விதிகளும் இல்லை.

என் வாயை மூடினால் அதானி பிரச்னையை ஒழித்துவிடலாம் என்று இந்த மோடி அரசு நினைத்தால், அது நடக்காது. எனது பதவி பறிப்பு மூலம் அதானி ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இன்று என்னை பதவி நீக்கம் செய்து இருக்கிறார்கள். நாளை சிபிஐ என் வீட்டிற்கு அனுப்பப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த 6 மாதங்களுக்கு அவர்கள் என்னை துன்புறுத்துவார்கள். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்காத அதானியின் ரூ. 13,000 கோடி நிலக்கரி ஊழல் பற்றி நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.மகளிர் சக்தியை உங்களால் கையாள முடியாது. எனக்கு 49 வயதாகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாஜவுடன் மோதுவேன்’ என்றார். பேட்டியின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் உடனிருந்தனர்.

* நாடாளுமன்றத்திற்கு அவமானம்: மம்தா ஆவேசம்
மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா கூறியதாவது:இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அவமானம். மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்டதை கண்டிக்கிறோம். கட்சி அவருடன் உறுதியாக நிற்கிறது. தேர்தலில் எங்களை தோற்கடிக்க முடியாமல் பாஜ பழிவாங்கும் அரசியலில் இறங்கியுள்ளது. இன்று இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு துரோகம் இழைத்த சோகமான நாள். 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, அதைப்பற்றி அனைத்துக் கட்சிகளும் விவாதிக்க 30 நிமிட அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 500 பக்கங்களை 30 நிமிடங்களுக்குள் முழுமையாக மதிப்பாய்வு செய்வது எப்படி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அனைத்து எம்பிக்களும் இதைப்பற்றி எப்படி முடிவெடுக்க முடியும்? ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டதை நான் கண்டிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அடுத்த தேர்தலில் மொய்த்ராவுக்கு வெற்றியை வழங்கி, இதற்கு மக்கள் தகுந்த பதிலையும், நீதியையும் வழங்குவார்கள். வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும். இதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் பா.ஜவை எதிர்த்து நிற்கும் இந்தியா கூட்டணியை நான் பாராட்டுகிறேன். பாஜ தனது பெரும்பான்மையின் காரணமாக தண்டனையின்றி செயல்பட முடியும் என்று நம்புகிறது. அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.

* நாடாளுமன்றத்தின் கருப்பு நாள்
மஹுவா மொய்த்ராவின் வெளியேற்றம் நாடாளுமன்றத்திற்கு கருப்பு நாள் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அதன்விவரம் வருமாறு:
மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி: மக்களவையில் பாஜ தனது மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்துவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. இது நாடாளுமன்றத்திற்கு கருப்பு நாள். மஹுவாவுக்கு நடந்தது அநீதி.
காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரி: புதிய மக்களவைக்கு இது ஒரு புதிய கருப்பு நாள். புதிய கருப்பு அத்தியாயம் இன்று தொடங்குகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி: நெறிமுறைக் குழு அறிக்கை முழுமையற்றது. கூட்டத்தில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் இரண்டரை நிமிடங்களில் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது குறித்து விவாதம் நடத்த வேண்டும்.
இ.கம்யூ எம்பி பினோய் விஷ்வம்: இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
காங்கிரஸ் எம்பி சசி தரூர்: இந்த அறிக்கையில் போதுமான ஆவணம் அல்ல. இது போன்ற வியத்தகு முறையில் வெளியேற்றும் பரிந்துரையை கொண்டு வரக்கூடிய எந்தவொரு அறிக்கையின் அடிப்படை தரத்தையும் இது பூர்த்தி செய்யவில்லை. எந்த தீவிர விவாதமும் இல்லாமல் இரண்டரை நிமிடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குற்றச்சாட்டை முன்வைத்தவர்களிடம் குறுக்கு விசாரணையும் இல்லை, வெளியேற்றப்படுபவருக்கு நியாயமான வாய்ப்பும் இல்லை. இது நீதியின் கேலிக்கூத்து.
சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி: வெளியேற்றம் என்பது மிகத் தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதன்மூலம் எந்தவொரு எம்.பி.யையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு நீங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த முடியும்.

* 61 கேள்விகளில் ஹிராநந்தானியின் கேள்விகள் 50
மஹுவா தகுதி நீக்கம் குறித்த விவாதத்தின் மீது பாஜ உறுப்பினர் ஹீனா காவித் பங்கேற்று பேசும் போது,’ நான் 495 பக்க ஆவணத்தைப் படித்து இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்து விட்டேன். இந்த அறிக்கையின்படி, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி தொலைத்தொடர்பு, கப்பல் போக்குவரத்து, ரியல் எஸ்டேட், பெட்ரோலியம் மற்றும் பைப்லைன் ஆகிய ஐந்து துறைகளில் ஆர்வமாக உள்ளார். உறுப்பினர் மஹுவா 61 கேள்விகளைக் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் ஹிராநந்தானி தொடர்பான இந்த ஐந்து துறைகள் தொடர்பானவை. கேள்விகளைப் பதிவேற்றுவதற்காக அவரது கணக்கு துபாயிலிருந்து 47 முறை, இங்கிலாந்து, அமெரிக்கா, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 6 முறை அணுகப்பட்டது என்றும் அறிக்கை கூறுகிறது. நெறிமுறைக் குழுவின் முன், அவர் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை ஹிரானந்தானியுடன் பகிர்ந்து கொண்டதை உறுப்பினர் ஒப்புக்கொண்டார். இத்தகைய நடத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளைக் கேட்கவில்லை. யாரோ ஒருவரின் விருப்பப்படி அவ்வாறு செய்கிறார்கள் என்று ஒரு செய்தியை அனுப்புகிறது. யாராவது பணம் கொடுத்தால் அவர்கள் சபையில் கேள்விகளை எழுப்பலாம்’ என்றார்.

The post அதானியின் ரூ.13,000 கோடி முறைகேட்டை பற்றி கேள்வி கேட்ட திரிணாமுல் பெண் எம்.பி. பதவி பறிப்பு: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Adani ,Lok Sabha ,New Delhi ,Mahua ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக பதவியேற்றதாக கூறி 2...