×

மான நஷ்டஈடு வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராக விலக்கு கோரிய வழக்கு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்: சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: மான நஷ்டஈடு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு அளித்த உத்தரவை எதிர்த்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சட்டத்தின்முன் அனைவரும் சமம், ஆஜராக விலக்கு கோருவதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்று தெரிவித்துள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேத்யூ சாமுவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, உடல் நிலை காரணத்தை தவிர வேறு எந்த காரணத்தின் மீதும் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க முடியாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண் டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், என்ன காரணத்திற்காக விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை என்று கேட்டனர். அதற்கு எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, காலில் காயம் காரணமாக நேரில் வரமுடியவில்லை. நேரில் ஆஜராக விலக்கு அளிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், உடல் நலம் தவிர வேறு என்ன காரணங்கள் உள்ளன என்று கேட்டனர்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அவர் எதிர்கட்சி தலைவர், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். காலில் அடிபட்டதை தவிர நீங்கள் கூறும் காரணங்கள் ஏற்க கூடியதாக இல்லை என்றனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இது தொடர்பாக விரிவாக வாதிடவுள்ளேன் என்றார். இதையடுத்து விசாரணையை வரும் 15 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post மான நஷ்டஈடு வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராக விலக்கு கோரிய வழக்கு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்: சென்னை ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : EPS ,Madras High Court ,Chennai ,Edappadi Palanichamy ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED யார், யாருக்கெல்லாம் பொங்கல்...