×

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: பிலிப்ஸ் 87 ரன் விளாசல்

மிர்பூர்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 ரன் முன்னிலை பெற்றது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது (66.2 ஓவர்). முஷ்பிகுர் 35, ஷகாதத் உசைன் 31, மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். நியூசி. பந்துவீச்சில் பிலிப்ஸ், சான்ட்னர் தலா 3, அஜாஸ் 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் நாள் முடிவில் 55 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது (12.4 ஓவர்).

2ம் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. டேரில் மிட்செல் 12, பிலிப்ஸ் 5 ரன்னுடன் நியூசி. இன்னிங்சை தொடர்ந்தனர். மிட்செல் 18 ரன்னில் பெவிலியன் திரும்ப, சான்ட்னர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிலிப்ஸ் – கைல் ஜேமிசன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தது. ஜேமிசன் 20 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த பிலிப்ஸ் 87 ரன் (72 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஷோரிபுல் பந்துவீச்சில் நூருல் ஹசன் வசம் பிடிபட்டார்.

கேப்டன் டிம் சவுத்தீ 14 ரன் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் தலா 3, ஷோரிபுல், நயீம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 8 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்துள்ளது. ஹசன் ஜாய் 2, கேப்டன் ஷான்டோ 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஜாகிர் ஹசன் 16 ரன், மோமினுல் ஹக் (0) களத்தில் உள்ளனர். இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: பிலிப்ஸ் 87 ரன் விளாசல் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Phillips ,Mirpur ,Bangladesh ,National Stadium ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…