×

மகளிர் டி20 கிரிக்கெட் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

மும்பை: இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 ஆட்டம் மும்பையில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டங்கள் எல்லாம் மும்பை வான்கடே அரங்கில் நடக்கிறது. டிச.6ம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 38 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது ஆட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது.

தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்றால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று வெற்றி பெற்றாக வேண்டும். முதல் தோல்விக்கு பதிலடி தந்தால்தான் தொடர் 1-1 என சமநிலைக்கு வரும். எனவே முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா போலவே மற்றவர்களும் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டும். ரேணுகா சிங் போல் சிறப்பாக பந்து வீச வேண்டும். சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை இந்திய மகளிர் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. கூடவே முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டேனியலி வியாட், நடாலியா ப்ரன்ட், ஆமி ஜோன்ஸ், ஷோபி எக்கல்ஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் கை கொடுக்க காத்திருக்கின்றனர். மேலும் இந்த ஆட்டத்தில் வெல்வதின் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலையை அதிகரிப்பதுடன் தொடரையும் வெல்ல முடியும். இரு அணிகளும் இன்று வெற்றிக்கு மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

The post மகளிர் டி20 கிரிக்கெட் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? appeared first on Dinakaran.

Tags : India ,England ,T20 ,Mumbai ,Dinakaran ,
× RELATED இந்தியா – இங்கிலாந்து மோதும் 3வது...