×

1640 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக சண்முகாநதி அணையில் தண்ணீர் திறப்பு

உத்தமபாளையம்: 1640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகாநதி அணையில் இருந்து இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டி அருகே 52.5 அடி உயரமுள்ள சண்முகாநதி அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல்மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, மேகமலை வனப் பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் சஜீவனா கலந்து கொண்டு தண்ணீரை திறந்துவிட்டார். இதன் மூலம் 1640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்களில் நீர்மட்டம் உயரும். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், உத்தமபாளையம் ஆர். டி.ஓ.பால்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 1640 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக சண்முகாநதி அணையில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Shanmukhanadi dam ,Utthampalayam ,Shanmukanadi dam ,Uttampalayam ,
× RELATED சண்முகாநதி அணை பகுதியில் 2600 நாட்டு மரக்கன்றுகள் நடல்