×

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் 27ம்தேதி முதல் தீப மை விநியோகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 27ம்தேதி ஆருத்ரா விழாவில் நடராஜருக்கு மகா தீப மை அணிவித்த பிறகு பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. நிறைவாக கடந்த 26ம்தேதி 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் நேற்று முன்தினம் இரவு வரை தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.

நேற்று காலை மகாதீப கொப்பரை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு இரவு 7 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், வரும் 27ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை வழங்கியும், மற்ற பக்தர்கள் கட்டணம் செலுத்தியும் தீப மையை பெற்றுக்கொள்ளலாம்.

அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதம் மற்றும் தீபத்திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடந்தது. ரூ.3 கோடியே 12 லட்சத்து 61 ஆயிரத்து 880யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக காணிக்கை உண்டியல் எண்ணும் பணி இன்றும் நடைபெற்றது. தீபத்திருவிழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்ைகயின் மொத்த விபரம் இன்று மாலை தெரியவரும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் 27ம்தேதி முதல் தீப மை விநியோகம் appeared first on Dinakaran.

Tags : D. Malai Annamalaiyar temple ,Tiruvannamalai ,Maha ,Nataraja ,27th Arutra Festival ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED திருவண்ணாமலை பௌர்ணமி...