×

இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுமார்தான் தென்ஆப்பிரிக்காவை வெல்வது கடினம்: ஆகாஷ்சோப்ரா சொல்கிறார்

டர்பன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டி வரும் 10ம்தேதி முதல் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே அணி சூர்யகுமார் தலைமையில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

பும்ராவைத் தவிர தற்போது இந்திய அணியில் இறுதிக்கட்டத்தில் பந்து வீசக்கூடிய தகுதியான வீரர்கள் இல்லை. இது டி20 உலக கோப்பையில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். இறுதி கட்ட ஓவரை வீசக்கூடிய வீரர் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையான போட்டிகள் பகலில் தான் நடைபெறும். அப்போது பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அர்ஸ்தீப் சிங் அவ்வளவு ஒன்றும் சிறப்பாக செயல்படவில்லை.

ஒரு போட்டியில் அவர் கடைசி ஓவர் சிறப்பாக வீசினார். ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னால் அவர் எப்படி பந்து வீசினாரோ அதேபோல் தற்போது செயல்படவில்லை. இதேபோன்றுதான் ஆவேஷ்கான், முகேஷ் குமார் ஆகியோர் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக இறுதி கட்ட ஓவரை யார் வீசுவது என்பது பெரிய கவலையை இந்தியாவுக்கு கொடுக்கும். டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நிச்சயம் இதில் இந்தியா கவனம் செலுத்தி அதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும். டி20 உலக கோப்பையை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

ஆனால் அதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியா மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் எல்லாம் வெற்றி பெறாது. அப்படி வெல்ல வேண்டுமென்றால் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் மற்றும் டி20-ல் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. நடந்து முடிந்த உலக கோப்பையிலும் அவர்கள் பிரமாதமான ஆட்டத்தை எல்லாம் வெளிப்படுத்தவில்லை. எனினும் தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நான் சொல்வது தவறாக போய் கூட முடியும். அப்படி ஆக வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். இந்த தொடரில் மொத்தம் 8 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 5 தென்னாப்பிரிக்காவும் 3 இந்தியாவும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுமார்தான் தென்ஆப்பிரிக்காவை வெல்வது கடினம்: ஆகாஷ்சோப்ரா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Akash Chopra Durban ,Akash Chopra ,Dinakaran ,
× RELATED 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்...