×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்தது மதுரை நீதிமன்றம்: மேல் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க அதிரடி உத்தரவு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை நிராகரித்த மதுரை நீதிமன்றம், மேல் விசாரணையை 6 மாதத்தில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தொடர் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் 100வது நாளின்போது மிகப்பெரிய அளவில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது 100வது நாளான கடந்த 22.05.2018 அன்று, அமைதியான முறையில் பேரணி நடந்த நிலையில், போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 15 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையும் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதும் சிபிஐ தரப்பில் வழக்கு பதியக் கோரி, அப்போதைய சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூணன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதை சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசுத் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த சிபிஐ, அர்ஜூணனின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அர்ஜூணன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இப்புகார் மீது சிபிஐ தரப்பில் வழக்கு பதியப்பட்டது.

தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இன்ஸ்பெக்டர் திருமலை என்பவர் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புகாரில் கூறப்பட்ட மற்ற காவல் துறையினர் மற்றும் வருவாய்துறையினர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. இதனால், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எதிர்த்து, அர்ஜூணன் தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

படுகொலை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட பலரை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர். முறையாக விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது. நிராகரிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அர்ஜூணன் தரப்பில் வக்கீல் ஷாஜி செல்லன் ஆஜராகி, ‘‘மனுதாரர் புகாரில் கூறப்பட்ட அதிகாரிகள் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரமும், முகாந்திரமும் உள்ளது. பலரை காப்பாற்றி, வழக்கை குறிப்பிட்ட சிலருடன் முடிக்கும் நோக்கத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உள்ளது.

இந்த படுகொலையில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும், வருவாய்த்துறையினருக்கும் எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே முறையான விசாரணையாக இருக்கும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை ஏற்புடையது அல்ல என்பதால் நிராகரித்து உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் மனுதாரர் குறிப்பிடும் காரணங்களின் அடிப்படையில், முறையாக மேல் விசாரணை நடத்தி 6 மாதத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்தது மதுரை நீதிமன்றம்: மேல் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Court ,CBI ,Thoothukudi ,Madurai ,
× RELATED மதுரை கோர்ட்டில் கைதியை போட்டோ எடுத்தவர் கைது