×

சென்னையில் கூட்டுறவு துறை சார்பில் 50 இடங்களில் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருள் விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கூட்டுறவு துறையின் மூலம், தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியில் இருந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் வாகனத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆய்வு செய்து, அனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் போன்றவற்றை அவர்கள் இருக்கின்ற இடங்களுக்கே வழங்க நேற்று முன்தினம் 10 நகரும் பண்ணை பசுமை காய்கறி விற்பனை வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றது.

தொடர்ந்து நேற்று அதன் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டு இந்த வாகனங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் ஆவின் பால் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதனடிப்படையில், இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். வெளிச்சந்தையில் கிடைக்கக்கூடிய விலையை விட இந்த வாகனங்களில் குறைவாக இருக்கும். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்காக ஏற்கனவே ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது.

ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் உள்ளது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே ரூ.214 கோடி கடன் மூலம் 58,000 வியாபாரிகள் பயனடைந்துள்ளார்கள். புதிதாக இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அது செல்ல இன்னும் முதல்வருடன் கலந்து பேசி, அவர்களுக்கான சிறப்புதிட்டங்களை அறிவிக்க ஆலோசனையினைப் பொற இருக்கின்றோம்.

இந்த வாகனங்கள் தவிர இடவசதி, பணியாளர் வசதி உள்ள இடங்களில் என இந்த வாகனத்தில் 15 வகையான மளிகைப்பொருட்கள் உடன் காய்கறி விற்பனை செய்வதைப் போல தேவை ஏற்படின் நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தண்ணீரில் பொருட்கள் சேதமடைந்திருந்தாலும், அங்கு வேறு தரமான பொருட்கள் எடுத்துவரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வுகளின் போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

* 15 வகை பொருட்கள்
காய்கறிகளை பொறுத்தவரையில் கிலோ ஒன்றுக்கு, தக்காளி ரூ.30க்கும், வெங்காயம் ரூ.50க்கும், உருளைக்கிழங்கு ரூ.16க்கும், சவ்சவ் ரூ.25க்கும், மிளகாய் ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.55க்கும், பீர்க்கங்காய் ரூ.50க்கும், பீட்ரூட் ரூ.60க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தைகளில் இதன் விலைகள் எல்லாம் கூடுதலாக இருக்கும்.

அதைப்போல மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு வாகனங்களிலும், மஞ்சள், சர்க்கரை, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், சமையல் எண்ணெய், டீ தூள், புளி, அரசு கல் உப்பு, ராகி மாவு, பொட்டு கடலை, கடை பருப்பு ஆகிய 15 வகை மளிகைபொருட்களும் இந்த வாகனங்களில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

The post சென்னையில் கூட்டுறவு துறை சார்பில் 50 இடங்களில் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருள் விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cooperative Department ,Chennai ,Minister ,Periyakaruppan ,Mikjam ,
× RELATED கூட்டுறவுத் துறை சார்பில் இன்று...