×

அண்ணாநகர் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு சூளைமேடு போலீசார் நிவாரணம்: பொதுமக்கள் வரவேற்பு

அண்ணாநகர்:அண்ணாநகர் சுற்று வட்டார பகுதிகளில், வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு சூளைமேடு போலீசார் நிவாரணம் வழங்கினர். மிக்ஜாம் புயல் காரணமாக அண்ணாநகர், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, திருமங்கலம் மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்டை வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து தங்களது நிலைமைகளை தெரிவித்தனர்.

இதையடுத்து அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், அமைந்தகரை, அரும்பாக்கம் பகுதியில் மாட்டிக்கொண்ட மக்களை உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கோயம்பேடு, சின்மயா நகர் பகுதியில் மழை வெள்ளத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மூதாட்டி பேபி(75) என்பவரை கோயம்பேடு போலீசார் மீட்டு அவரது மகள் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, சூளைமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்த மக்களுக்கு சூளைமேடு போலீசார் படகு மூலம் சென்று, கடந்த மூன்று நாட்களாக தேவையான சாப்பாடு, குடிநீர், டீ, காபி பிஸ்கட், பிரட் கொடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் மழைவெள்ளம் சூழ்ந்து வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொண்டோம்.

அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இல்லாததால் வெளியே போக முடியாமல் அவதிப்பட்டோம். இதனால் போலீசார் உதவியை நாடினோம். போன் செய்த சில மணி நேரங்களில் போலீசார் வந்து மக்களை பத்திரமாக மீட்டதுடன் படகு மூலம் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து உணவு, டீ, காபி, பிஸ்கட் பிரட் வழங்கினர். இதற்காக போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,’’ என்றனர்.

The post அண்ணாநகர் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு சூளைமேடு போலீசார் நிவாரணம்: பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chulaimedu ,Annanagar ,Chulaimedu police ,Mikjam ,Dinakaran ,
× RELATED போலீசார் மீது மண்ணை வாரி வீசிய 2 திருநங்கைகள் கைது