×

புளியந்தோப்பில் கனமழை, புயலுக்கு நடுவில் ரப்பர் படகில் கொண்டு சென்று மூதாட்டியின் உடல் அடக்கம்: தீயணைப்பு வீரர்களுக்கு குவியும் பாராட்டு

பெரம்பூர்: மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த திங்கட்கிழமை சென்னை முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே, பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியது. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதில், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த வகையில், புளியந்தோப்பு வெங்கடேசபுரம் நியூ காலனி 3வது தெருவை சேர்ந்தவர் பூசம்மாள் (76). இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். கனமழை காரணமாக புளியந்தோப்பு முழுவதும் இடுப்பு அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியது.

இதனால், அவரது உடலை அடக்கம் செய்வதில் உறவினர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தண்ணீர் குறையும் என்று எதிர்பார்த்தார்கள் இருப்பினும் குறையவில்லை. இதனை அடுத்து, தீணைப்புத்துறை உதவியை நாடியவர்களுக்கு வியாசர்பாடி தீயணைப்பு துறையினர் உதவி கரம் நீட்டினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வியாசர்பாடி நிலைய அலுவலர் எட்வின் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், பூசம்மாளின் உடலை பத்திரமாக கருப்பு நிற கவரில் பேக் செய்து, ரப்பர் படகு மூலம் புளியந்தோப்பு, கணேசபுரம் ஜீவா மேம்பாலம் வழியாக வியாசர்பாடியில் தண்ணீர் இல்லாத பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து, அவரது உடல் அமரர் உறுதி மூலம் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கடும் சவால்களுக்கு இடையே பூசம்மாளின் உடலை நல்லவிதமாக கொண்டு வந்து சேர்த்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு, மூதாட்டியின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

The post புளியந்தோப்பில் கனமழை, புயலுக்கு நடுவில் ரப்பர் படகில் கொண்டு சென்று மூதாட்டியின் உடல் அடக்கம்: தீயணைப்பு வீரர்களுக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Pulianthop ,PERAMPUR ,MIKJAM ,ACROSS ,CHENNAI ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...