×

அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்த நிலையில் ஐஏஎஸ் தேர்வுக்கான கேள்வித்தாளை மாநில மொழியில் ஏன் வழங்க கூடாது? மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வித்தாள்களை அந்தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என்று மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஐ ஏ.எஸ்-ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இதனால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீசஸ் உட்பட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் விதிகளின் படியே நடத்தப்படுகிறது.

இந்த வழக்கில், தேர்வாணையத்தின் கருத்துகள் இன்னும் கிடைக்காததால், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து, சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர், அனைத்து மொழிகளிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வித்தாள்களை அந்தந்த மொழிகளில் வழங்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

The post அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்த நிலையில் ஐஏஎஸ் தேர்வுக்கான கேள்வித்தாளை மாநில மொழியில் ஏன் வழங்க கூடாது? மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Central Government Staff Selection Commission ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் மாற்று சான்றிதழ்: ஐகோர்ட் அறிவுறுத்தல்