×

ராமஞ்சேரி, திருக்கண்டலம் பகுதிகளில் புதிதாக 2 ஏரிகள் உருவாக்கப்படும்: பூண்டி நீர்த்தேக்கத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

புழல்: மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகள் பெருமளவு நிரம்பியது. முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீரும் வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர் வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் மற்றும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர் அனுப்புவது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு பெரிய மழையை இப்போதுதான் சென்னை சந்திக்கிறது. எவ்வளவுதான் முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், எதிர்பாராத இந்த பெரும் மழையால் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் முதல்வர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இரவு பகல் பாராமல் சென்று ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அமைச்சர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி வைத்து, அப்பகுதிகளில் உள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என உத்திரவிட்டார். இந்த மாவட்டத்தின் பொறுப்பில் உள்ள அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த பணிகளை சிறப்பாகவும், வேகமாகவும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இந்த மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய வேண்டும் என்பதற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை அனுப்பி இருக்கிறார். எனவே பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது, உணவு, உடை, இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றை செய்து கொண்டிருக்கின்றனர்.

அரசு அதிகாரிகளுடன் நீர் ஆதாரங்களை கவனித்து, ஏரிகள் உடைப்பு இருந்தால் அவைகளை அடைத்தும் வருகின்றனர். பூண்டி, புழல் போன்ற பகுதிகளில் பெரும் வெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆபத்து நேரா வண்ணம் இருப்பதற்கு பணியாற்றி வருகின்றனர். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றி விடுகிறோம். எனவே ஆபத்து எந்த வகையிலும் வராது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். தண்ணீரை சேமித்து வைக்க திருக்கண்டலம் மற்றும் ராமஞ்சேரி ஆகிய 2 இடங்களில் புதிய ஏரிகள் அமைக்கப்படும்.

கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறு உள்ள பகுதிகளில் தண்ணீரை சேமித்து வைக்க மக்கள் சம்மதிக்கவில்லை. எனவே திருக்கண்டலத்தில் தண்ணீர் சேமிப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் பல டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது தமிழக கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கலெக்டர் த.பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ், வட்டாட்சியர் சுரேஷ்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.

* புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது
மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக புழல் ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வந்ததால், ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் கூறுகையில், ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது.

இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன பாதுகாப்பு தடுப்பு சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் எப்டிஎல் விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேற்று நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நீர்மட்டத்தை சரியாக கையாளப்படுகிறது. இதனால் புழல் ஏரிக்கும் மக்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. புழல் மட்டுமின்றி மற்ற ஏரி பகுதிகளிலும் ஆபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

The post ராமஞ்சேரி, திருக்கண்டலம் பகுதிகளில் புதிதாக 2 ஏரிகள் உருவாக்கப்படும்: பூண்டி நீர்த்தேக்கத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ramancherry ,Thirukandalam ,Minister ,Duraimurugan ,Poondi Reservoir ,Mikjam ,Tiruvallur district ,Chennai ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அளித்தது வாக்குறுதி அல்ல,...