×

ரூ.100 கோடி மோசடியில் தலைமறைவு பிரணவ் ஜூவல்லரி அதிபர் மதுரை நீதிமன்றத்தில் சரண்: சிறையில் அடைக்க உத்தரவு

மதுரை: சுமார் ரூ.100 கோடிக்கு பணமோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரணவ் ஜூவல்லரி செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதத் தவணைகளில் நகை சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்தினர்.

இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோரிடம் இருந்து சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் வசூலித்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நகைகளை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு இடங்களில் புகார் எழுந்தது. இதனிடையே, மாநிலம் முழுவதும் இருந்த பிரணவ் ஜூவல்லரி நகைக்கடைகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இந்த மோசடி குறித்து மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இதற்கிடையே மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவிக்கு போலீசார் தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்ட மதன் செல்வராஜ், மதுரையிலுள்ள பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நேற்று சரணடைந்தார். அவரை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கே.ஆர்.ஜோதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ரூ.100 கோடி மோசடியில் தலைமறைவு பிரணவ் ஜூவல்லரி அதிபர் மதுரை நீதிமன்றத்தில் சரண்: சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pranav Jewellery ,Madurai Court ,Madurai ,Pranav Jewelery ,Madan Selvaraj ,
× RELATED மதுரை கோர்ட்டில் கைதியை போட்டோ எடுத்தவர் கைது