×

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை வசம் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் 133 படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று (06.12.2023) சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (7-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், IND-TN-10-MM- 1061 IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகுகளில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் 6-12-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு. அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவலைபடத் தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்புப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Lankan navy ,Foreign Minister ,Chennai ,Sri Lanka Navy ,K. Stalin ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்