×

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை அறிந்து பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்தார் : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை அறிந்து பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்ததாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ‘மிக்ஜாம்’ புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது புயல் பாதிப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல் பாதிப்புகள், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த தகவல் தொகுப்பு விளக்க படத்தை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக உயர் அதிகாரிகள் ஒன்றிய அமைச்சருக்கு காட்டி, விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை அறிந்து பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்தார். உடனே நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்,” என்றார். இதையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,” சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு விரைவில் வர உள்ளது. அனைத்துப் பகுதிகளையும் இயல்புநிலைக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனுவாக அளித்துள்ளேன்,”என்றார்.

The post தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை அறிந்து பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்தார் : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Union Minister ,Rajnath Singh ,Chennai ,Modi ,PM ,
× RELATED அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப...