×

மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு: ரூ.5060 கோடி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். மேலும் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று 2வது நாளாக முதல்வர் ஆய்வு செய்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் வெளுத்து வாங்கியது மழை. இந்த 2 நாட்களில் அதிகப்பட்சமாக 74 செ.மீ. மழை சென்னை பெருங்குடியில் பதிவாகியுள்ளது. மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள நீரால் சூழப்பட்டு தீவு போல் காட்சி அளிக்கிறது. சென்னை நகர் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடிந்தாலும், புறநகர் பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது.

மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் ராட்சத மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் இடைவிடாமல் நடைபெற்று வந்தது. இதன்மூலம் சென்னை நகர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் சென்னையின் புறநகர் பகுதிகளை இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. படகுகள் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். 2வது நாளாக நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்சென்னை பகுதியான தரமணி 100 அடி சாலையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்றார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டவர்களுக்கு பாய், பிரட், பிஸ்கட், அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து துரைப்பாக்கத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று, அங்கு தங்கி இருந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். ‘மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடப்பதாகவும், விரைவில் நிலைமை சரியாகும்’ என்றும் அங்கிருந்தவர்களிடம் முதல்வர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகம் அருகே நேப்பியர் பாலத்தை பார்வையிட்டதுடன், அந்த பகுதியில் கூவம் ஆற்றில் இருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்கும் முகத்துவார பகுதிகளையும் பார்வையிட்டார். பின்னர் தலைமை செயலகம் சென்று அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியான புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று அங்கு தங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், அந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து மாலையில் வடசென்னை பகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளை பார்வையிட்டார். பொதுமக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது, முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை பிரதமரிடம் டி.ஆர்.பாலு எம்.பி நேரில் வழங்குகிறார்.

The post மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு: ரூ.5060 கோடி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,CHENNAI ,PM ,MODI K. Stalin ,Narendra Modi ,Storm Mikjam ,storm ,PM Modi K. Stalin ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...