×

1964ம் ஆண்டு புயல் உருக்குலைத்த தனுஷ்கோடி தேவாலயத்துக்கு புது சிக்கல்: கற்களை பெயர்த்து விற்பதால் இடியும் ஆபத்து

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த தேவாலயச் சுவரில் உள்ள சுண்ணாம்பு கற்களை சுற்றுலாப் பயணிகள் பெயர்த்து எடுத்துச் செல்வதை தடுத்து புனரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டில் வீசிய பயங்கர புயலில் நகரமே கடலில் மூழ்கியது. இங்கிருந்த துறைமுகம், ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் உடைந்து சேதமடைந்தன. இந்த துயரச் சம்பவத்தில் தனுஷ்கோடி ரயில் நிலையம் அருகில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் மேற்கூரை உடைந்து சேதமடைந்தது. தனுஷ்கோடி புயலில் உருக்குலைந்த நகரத்தின் எச்சமாய் காட்சியளித்துக் கொண்டிருந்த சேதமான தேவாலயத்தை, அது தற்போது இருக்கும் நிலையிலேயே பராமரிக்க பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்தினர்.

போதிய முயற்சிகள் எடுக்கப்படாததால், ஆண்டுதோறும் புயல், மழையினால் தேவாலய கட்டிடம் மேலும் சேதமடைந்து வருகிறது. தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் இந்த தேவாலயக் கட்டிடத்தின் சேதமடைந்த சுவர்களில் இருக்கும் கற்களை மிதக்கும் கல் எனக்கூறி பெயர்த்து எடுத்துச் செல்வதும் அவ்வப்போது நடக்கிறது. இந்த தேவாலயக் கற்களை பெயர்த்து, மிதக்கும் கற்கள் என்றும், தனுஷ்கோடி புயல் அழிவின் நினைவுச்சின்னம் என்றும் கூறி விற்பனை நடப்பதாகவும் தெரிகிறது. இதனால் பிடிமானம் இழந்து தேவாலய கட்டிடம் முழுவதும் உடைந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சுற்றுலாப் பயணிகள் இரண்டு பேர் ஆளுக்கொரு கற்களை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தனுஷ்கோடியில் புயல் அழிவின் ஞாபகார்த்தமாக உள்ள அனைத்து சேதமடைந்த கட்டிடங்களை அதே நிலையில் பராமரித்து பாதுகாக்கவும், சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இடையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தினால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இயற்கை சீற்றத்தால் தேவாலயக் கட்டிடம் மேலும் பலவீனமடைந்து இடிந்து விழும் அவலநிலை உள்ளது. தனுஷ்கோடி புயல் நினைவுச்சின்னங்களாக நிற்கும் தேவாலயம் உள்ளிட்ட கட்டிடங்களை புனரமைத்து பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகள் இதன் அருகில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள், பழமை ஆர்வலர்கள் மற்றும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

The post 1964ம் ஆண்டு புயல் உருக்குலைத்த தனுஷ்கோடி தேவாலயத்துக்கு புது சிக்கல்: கற்களை பெயர்த்து விற்பதால் இடியும் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Church ,Rameswaram ,Dhanushkodi church ,
× RELATED ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய இணையதள முகவரி வெளியீடு..!!