×

பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்படும் 200 இடங்களில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு: கடலூர் மாவட்ட ஆய்வில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்: பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்படும் 200 இடங்களில் தொடர்ந்து தீவிர கண்காணிக்கப்படுகிறது என்று கடலூர் மாவட்ட ஆய்வில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலானது 5ம்x தேதி முற்பகலில் ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திர வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கடலூரில் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.இதனையடுத்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கார்த்திகேயன் நகர் மற்றும் கடலூர் முதுநகர், நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகளையும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குடிகாடு ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முதலமைச்சர் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு கூட்டம் நடத்தி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், எல்லாம் தயார் நிலையில் இருக்க ஆலோசனை வழங்கினார். அதன் அடிப்படையில் மழை தொடர்ந்து பெய்தாலும், அது வடியக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் அதிக அளவு மழை பெய்து இருக்கிறது. அதை தாங்க கூடிய அளவுக்கு தயார் நிலை இருந்த காரணத்தினால் வெள்ளத்தினால் பாதிக்க கூடிய அளவு குறைவாக இருக்கிறது. 225 ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் தற்போது முடிக்கி விடப்பட்டுள்ளது. கண்காணிப்பு அதிகாரி நேற்று மாவட்ட முழுவதும் பார்வையிட்டுள்ளார். பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு தங்கும் இடமும்,  உணவு வழங்கவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார். கடந்த ஜூன் மாதம் திடீரென வீசிய சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட 1200 ஏக்கர் வாழை மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதற்குரிய நிவாரணம் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அன்சூல் மிஸ்ரா ,ஐயப்பன் எம்எல்ஏ, ஆட்சியர் அருண் தம்பு ராஜ், மேயர் சந்தரிராஜா ,துணை மேயர் தாமரைச்செல்வன் ,ஆணையர் காந்திராஜ் ,மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன் ,விஜயசுந்தரம், தனஞ்செயன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா குமரன் ,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்படும் 200 இடங்களில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு: கடலூர் மாவட்ட ஆய்வில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK ,Panneerselvam ,Cuddalore ,MRK Paneerselvam ,Dinakaran ,
× RELATED வேளாண் பட்ஜெட்டின் மூலம்...