×

மிக்ஜம் புயல் எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு

குன்றத்தூர்: மிக்ஜம் புயல் எதிரொலியால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து பல்வேறு கட்டமாக 100 முதல் 6000 கன அடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது.

காலை ஏரியில் இருந்து 3000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தபோதும்கூட ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி. தற்போது 20.66 அடி நீர் உள்ளது.

இதுபோன்று மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி. தற்போது 2769 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 450 கன அடியாக குறைந்துள்ளது. வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் கரையை கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைவாக இருந்தபோதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 1650 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, நீர் நிறைந்து ரம்மியமாக காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் அழகை காண்பதற்காக குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

இவர்கள், ஓரமாக நின்று ஏரியின் அழகை மட்டும் ரசிக்காமல் அங்குள்ள தடுப்புச்சுவரில் ஏறிநின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்கின்றனர். இதனால் ஏரிக்குள் தவறிவிழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே, மழை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மிக்ஜம் புயல் எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Lake Sembarambakkam ,Kunradthur ,Chembarambakkam lake ,Mikjam storm ,Chennai Suburbs… ,Mikjam ,Sembarambakkam lake ,Dinakaran ,
× RELATED குன்றத்தூரில் கோயில் இடத்தில்...