×

தாம்பரத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்பு கொட்டும் மழையிலும் கலெக்டர் ஆய்வு: செங்கை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முதலில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், தாழ்வான கட்டிடத்தில் இருந்த நோயாளிகளை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து அறிவுரை வழங்கினார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் செல்லும் கால்வாயை பார்வையிட்டு பின்னர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் நல வார்டு கட்டிடங்களை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள், மீட்பு பணிக்கு பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் படகுகள் போன்றவற்றை கொட்டும் மழையிலும் ஆய்வு செய்தார். பின்னர், நன்மங்கலம் ஏரியை பார்வையிட்டார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளம்பர பலகை மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 46 விளம்பர பலகை மற்றும் 136 விளம்பர பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டது.

பின்னர் நிருபர்களை சந்தித்து ராகுல்நாத் கூறுகையில், ‘‘மிக்ஜம் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. புயல் 5ம்தேதி காலை கரையை கடக்கும் என சொல்லப்படுகிறது. 4ம்தேதி முதல் 5ம்தேதி வரை மாவட்டம் முழுவதும் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ரெட் அலர்ட் உள்ளது. மாவட்ட முழுவதும் 290 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புயலின்போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிமீ இருக்கும் என கூறப்படுகிறது. காற்று வீசும்போது மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்துவிழுந்து சேதங்கள் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் சரி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வார்டுகளிலும் முழுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளோம். மக்கள் தங்குவதற்கான முகாம் தயார் நிலையில் உள்ளது. மக்கள் எந்த பதட்டமும் அச்சமும் அடையவேண்டாம்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரம், கல்பாக்கம் போன்ற சில இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்றார். ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார், மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் பலர் உடனிருந்தனர்.

The post தாம்பரத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்பு கொட்டும் மழையிலும் கலெக்டர் ஆய்வு: செங்கை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Tambaram Collector ,Sengai district ,Tambaram ,Sengalpattu ,Rahul Nath ,Mikjam ,Tambaram Corporation ,Senkai ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது