×

முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தில் மழைநீர் தேங்குவதாக டிவிட்டரில் அவதூறு பரப்பிய நபரிடம் போலீஸ் விசாரணை

 

சென்னை: முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தில் மழைநீர் தேங்குவதாக, டிவிட்டரில் அவதூறு பரப்பியநபரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வரின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக புகைப்படத்துடன் கடந்த 1ம் தேதி பிரியகுமரன் என்ற டிவிட்டர் கணக்கில் தவறான செய்தி வெளியானது. இதுதொடர்பாக, சென்னை காவல் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று பிரியகுமரன் என்ற டிவிட்டர் கணக்கு வைத்துள்ள நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

விசாரணையில், அந்த டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட புகைப்படமானது ஜி.எம்.கார்த்திகை செல்வன் ((@kselvam_bjp) என்ற டிவிட்டர் கணக்கில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி பதிவிட்ட புகைப்படமாகும். இந்நிலையில், பிரியகுமரன் என்ற டிவிட்டர் கணக்கின் அட்மின், பழைய புகைப்படத்தை தற்போது தவறான செய்திகளை பரப்பும் உள்நோக்கத்தோடு வெளியிட்டது தெரியவந்தது.டிவிட்டரில் முதல்வரின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் பற்றி பொய்யான தகவல் பரப்பப்பட்டு உள்ளது.

அதன்மூலம் பொதுமக்களிடையே முதல்வர் பற்றிய தவறான செய்திகளை பரப்பியும், புரளியை உண்டாக்கியும், பொதுமக்களை அரசுக்கு எதிராக கலவரம் செய்யும் வகையில் தூண்டியும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற தூண்டும் வகையிலும் உள்ளதால், அவரிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் ஆன்லைன் சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிடுவதற்கு முன் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பதிவிட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சைபர் கிரைம் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் பொதுமக்கள் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

The post முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தில் மழைநீர் தேங்குவதாக டிவிட்டரில் அவதூறு பரப்பிய நபரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : chief minister ,CHENNAI ,Tamil Nadu ,Twitter ,Dinakaran ,
× RELATED நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள்...