×

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புதிய அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

 

சென்னை: ஞாயிற்றுக்கிழமை பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று புதிய நேர அட்டவணைபடி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும், என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய அட்டவணையின்படி, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவைகள் பின்வரும் புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடை வெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இன்று ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் 17ம் தேதியும் சலுகை அறிவிப்பு
மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மற்றும் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில்வே நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சிறப்பு கட்டண சலுகையை மெட்ரோ நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (3ம் தேதி) க்யூஆர் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று பயணம் மேற்கொள்ளலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் க்யூஆர் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் இன்று பயணிக்க முடியாததை கருத்தில் கொண்டும், மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியும், அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும் ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற 17ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புதிய அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro ,CHENNAI ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில்களில் பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகள் பயணம்