×

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியை இந்த அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 என உயர்த்தி வழங்கியும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கும் பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது. மேலும், சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் முழு பங்கு வகிக்கும் வகையில் பொதுக் கட்டிடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து மறுவாழ்வு உதவிகளும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் சமுதாயத்திலேயே கிடைக்கும் வகையில் கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கும் பணியும் “உரிமைகள் திட்டம்” மூலம் செயல்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி தமிழ்நாடு அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உறுதி ஏற்றுள்ள, “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”,

“சமுதாயத்தில் ஒருவரும் விடுபடக்கூடாது” போன்ற கொள்கைகளை பின்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த நாளில் “மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,International Day of Persons with Disabilities ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...