![]()
சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 13.07.2023ம் தேதியன்று சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2023-மில் பெண் ஒருவர் டேட்டிங் செயலியில் புகார்தாரரை தொடர்புகொண்டதாகவும், பின்னர் சில மாதங்களுக்கு பிறகு டெலிகிராம் செயலி மூலம் போலியான தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொண்டு, புகார்தாரரிடமிருந்து வருமான விவரங்கள், சொத்து விவரங்கள். வங்கி மற்றும் சேமிப்பு வைப்பு விவரங்கள் ஆகிய தகவல்களை பெற்றதாகவும், மேலும் சில மாதங்களாக டெலிகிராம் செயலி மூலம் குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலம் நல்ல உறவையையும், நம்பிக்கையையும் உருவாக்கியதாகவும், ஆனால் விடியோ அழைப்பில் வர மறுப்பு தெரிவித்ததாகவும், பின்னர் மோசடி செய்தவர் ஒவ்வொரு வாரமும் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைகள் கூறி புகார்தாரரை நம்ப வைத்துள்ளார்.
அதனை உண்மையென நம்பிய புகார்தாரர் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு ரூ.69,40,000/- பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்ததாகவும், தன்னை திட்டமிட்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்தார். சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினரின் புலன் விசாரணையில் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்கு விவரங்கள் பெறப்பட்டதில் மோசடி செய்தவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் குஜராத் விரைந்து சென்று கலோலில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட சுதிர் தண்டன், வ/39, த/பெ.சந்திரமோகன், கலோல், அகமதாபாத், குஜராத் மாநிலம் எனபவரை 28.11.2023 அன்று கைது செய்து எதிரிடமிருந்து 1 செல்போன் மற்றும் 9 டெபிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட எதிரி சுதிர்தண்டனை, அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
The post டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகிப் சென்னையைச் சேர்ந்தவரிடம் ரூ.69.40 லட்சம் மோசடி: குஜராத்தைச் சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.
