×

தைப்பூச திருவிழா நாட்களில் பழநிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும். இவ்விழா வரும் ஜன.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக வருவதால், ஊர் திரும்புவதற்கு பஸ்களில் அதிகமாக செல்கின்றனர். இந்நிலையில், பழநி வழித்தடத்தில் போதிய ரயில்கள் இல்லாததால், பக்தர்கள் அனைவரும் பஸ்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பழநியில் இருந்து பிற ஊர்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பழநி வரை இயக்கப்பட்டு வந்த சில ரயில்களும் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. எனவே, திருவிழா காலங்களில் மட்டுமாவது பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பழநியைச் சேர்ந்த ரயில் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி முருகானந்தம் கூறுகையில், ‘‘பழநியில் இருந்து திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல, பழநியில் இருந்து திண்டுக்கல், சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த 2 ரயில்களுமே தற்போது பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில்களால் கேரள மக்கள் மட்டுமே பயன்பெறும் சூழல் நிலவுகிறது. தைப்பூச திருவிழாவிற்கு கோவை, மதுரை, காரைக்குடி, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வருவர். எனவே, அவர்களின் வசதிக்காக திருவிழா நடைபெறும் நாட்களில் மட்டுமாவது சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்’’ என்றார்.

The post தைப்பூச திருவிழா நாட்களில் பழநிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Palani ,Thaipusa festival ,Dandayuthapani Swamy hill ,Palani, Dindigul district ,Thaipusam ,Dinakaran ,
× RELATED பழநி பிரசாதம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை