×

நலம் தரும் கைவைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

1.பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2.தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3.வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4.காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5. தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6.காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7.உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8.புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

9.குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

10.கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

11.மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

12.பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13.மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14.வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15.படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

தொகுப்பு: யுவதி

The post நலம் தரும் கைவைத்தியம்! appeared first on Dinakaran.

Tags : Rubbishmani ,Ponmeni ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மீது கொடூர தாக்குதல்: போலீசார் விசாரணை