×

செம்மண் டெண்டர் விவகாரம்; அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரம் விசாரணை: அமலாக்கத்துறையிடம் ஆவணங்களை வழங்கினார்

சென்னை: செம்மண் வெட்டி எடுக்க டெண்டர் விட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, கடந்த 2006 முதல் 2011 மே வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் அளவுக்கு மீறி செம்மண் வெட்டி எடுக்க டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது கடந்த 2011 இறுதியில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை 17ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் 3வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை நேரில் ஆஜராக கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அதை ஏற்று அமைச்சர் பொன்முடி நேற்று காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது, அதிகாரிகள் ஏற்கனவே கேட்டிருந்த சில ஆவணங்களை பொன்முடி அளித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு உரிய விளக்கத்தை அமைச்சர் பொன்முடி ஆவணங்களுடன் அளித்துள்ளார். தொடர்ந்து 5 மணி நேரம் நீடித்த விசாரணை, மாலை 3.30 மணிக்கு முடிந்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி 4.10 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சரை நேரில் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செம்மண் டெண்டர் விவகாரம்; அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரம் விசாரணை: அமலாக்கத்துறையிடம் ஆவணங்களை வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Semman ,Minister ,Ponmudi ,CHENNAI ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED ஆந்திராவிலிருந்து செம்மண் கடத்திய இருவர் கைது