×

தனிப்பட்ட முறையில் வெளிநாடு பயணம் எம்பிக்களுக்கு கடும் கட்டுப்பாடு: ஒன்றிய அரசுஅனுமதி பெற வேண்டும்

புதுடெல்லி: தனிப்பட்ட முறையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எம்பிக்கள் அங்கு வெளிநாட்டு விரும்தோம்பலை ஏற்பது குறித்து ஒன்றிய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று மாநிலங்களவை அறிவுறுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுபெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்பிக்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போதும், வெளிநாட்டு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளும் போது கடுமையான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் மாநிலங்களவை செயலகம் வெளியிடப்பட்ட புதிய உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* எம்.பி.க்கள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளை நேர்மையான மற்றும் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதில் குறுக்கிடக்கூடிய பரிசுகளை வாங்கக் கூடாது என்று கட்டளையிடும் நெறிமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* எந்த ஒரு வௌிநாடு மூலமும், அதாவது, வெளிநாட்டு அரசுகள் அல்லது எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்தும் பெறப்படும் அனைத்து அழைப்புகளும் வெளியுறவு அமைச்சகம் மூலம் எம்பிக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை வெளிநாடுகளில் இருந்து அழைப்பை நேரடியாகப் பெறப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். மேலும் அந்த பயணத்திற்காக வெளியுறவு அமைச்சகத்தின் தேவையான அரசியல் அனுமதியையும் பெறப்பட வேண்டும். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 பிரிவு 6ன் கீழ் இனிமேல் ஒன்றிய அரசின் முன் அனுமதியையும் பெற வேண்டும். எம்.பி.க்கள் வெளிநாட்டு விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் முன்மொழியப்பட்ட பயணத் தேதிக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்னதாக உள்துறை அமைச்சகத்தை சென்றடைய வேண்டும். அவர்களது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், அந்த அமைப்பு/நிறுவனத்தின் சான்றிதழ்கள் குறித்து உறுப்பினர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டும்

* எம்.பி.க்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றிய தகவலை குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு முன்னதாக மாநிலங்களவை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநிலங்களவை மூலம் பயண விவரம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் தங்கள் பயணத்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டவுடன், நெறிமுறைப் பிரிவின் பொறுப்பாளர் இணைச் செயலருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* நாடாளுமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் எதையும் எம்.பி.க்கள் செய்யக்கூடாது.

* நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளில், பாரபட்சமற்ற செயல்பாட்டில் தலையிடக்கூடிய ஒரு பரிசை எடுக்கக்கூடாது. இருப்பினும், அவர்கள் தற்செயலான பரிசுகள் அல்லது நினைவு பரிசுகள் மற்றும் வழக்கமான விருந்தோம்பல் ஆகியவற்றை ஏற்கலாம்

* எம்.பி.க்கள் தங்களுடைய தனிப்பட்ட நிதி நலன்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் ஆகியவை பொது நலனுடன் முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய மோதல்கள் எப்போதாவது எழுந்தால், பொதுநலன் பாதிக்கப்படாதவகையில் அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனிப்பட்ட முறையில் வெளிநாடு பயணம் எம்பிக்களுக்கு கடும் கட்டுப்பாடு: ஒன்றிய அரசுஅனுமதி பெற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : EU ,New Delhi ,EU government ,
× RELATED ஒன்றிய அரசு நிலம் ஒதுக்க வேண்டும்: ஆம் ஆத்மி