×

அரிசி ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகள் 2வது முறையாக உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரிசி ஆலை வளாகத்தில், வைக்கப்பட்டிருந்த மின் மாற்றிகளை 2வது முறையாக உடைத்து அதில், இருந்த காப்பர் கம்பிகள் மற்றும் ஆயில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் அரிசி ஆலை உள்ளது. இது விவசாயி ஆர்.எம்.ஆர் ஜானகிராமனுக்கு சொந்தமானது. இதன், வளாகத்தில் சுமார் 5 ஆண்டு காலமாக மின்வாரியத்துக்கு சொந்தமான புதிய மின்மாற்றிகள் வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது, பழுதாகி உள்ள மின்மாற்றிகளுக்கு பதிலாக இங்கிருந்து, புதிய மின்மாற்றிகளை எடுத்துச் சென்று, தேவைப்படும் இடத்தில் பொருத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு இருந்த புதிய மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த காப்பர் கம்பிகள், இன்ஜின் ஆயில் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி ஜானகிராமன் மின்வாரிய உதவி பொறியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அதிகாரி இதுவரை நேரில் வந்து பார்க்கவில்லை. இது சம்பந்தமாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, 2வது முறையாக கடந்த இருதினங்களுக்கு முன்பு அதேபோல், மின்மாற்றிகளையும் உடைத்து அதில் இருந்த காப்பர் வயர்கள், ஆயில்கள் திருடப்பட்டுள்ளன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மின்மாற்றிகள் உடைத்து திருடப்பட்டும், இந்த திருடப்பட்ட பொருட்கள் சம்பந்தமாக இதுவரை மின்வாரித்துறை அதிகாரிகளோ, காவல்துறை அதிகாரிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை. இந்த செயல்களுக்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என குற்றச்சாட்டு எழுவதாக பரவலாக பேசப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அங்கிருந்த தெரு விளக்கு மின் வயர்கள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த மின்மாற்றி திருட்டு சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளோ காவல்துறையினரோ வந்து பார்வையிட்டு அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளை திருடியது யார், மின்வாரிய ஊழியர்களா அல்லது மர்ம ஆசாமிகளா என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

The post அரிசி ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகள் 2வது முறையாக உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Mettupalayam ,Meenjur ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட...