×

பாலியல் குற்ற வழக்குகளுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மேலும் 3 ஆண்டுகள் தொடரும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விரைவான நீதியை வழங்க, ஒன்றிய அரசின் நிதி உதவித் திட்டமான, விரைவு சிறப்பு நீதிமன்றங்களை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் நிர்பயா கூட்டு பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 2018ல் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்காக 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதில் போக்சோ வழக்குகளை விசாரிக்க பிரத்யேகமாக 389 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் நிதி உதவியின் கீழ் 2019ல் ஓராண்டுக்கு தொடங்கப்பட்ட இத்திட்டம் கடந்த மார்ச் 31 வரை கூடுதலாக 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நிதி உதவி அளிக்கப்பட்ட போதிலும், 754 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பட்டன. இந்நிலையில், ₹1,952.23 கோடியில் இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இதில் ஒன்றிய அரசு பங்களிப்பாக ₹1,207.24 கோடியும், மாநில அரசுகள் ₹744.99 கோடியும் நிதி வழங்கும். நிர்பயா நிதித் தொகுப்பிலிருந்து ஒன்றிய அரசின் பங்கு விடுவிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 414 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் மற்றும் 761 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமையை இலவசமாக வழங்கும் இலவச உணவு தானியங்கள் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The post பாலியல் குற்ற வழக்குகளுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மேலும் 3 ஆண்டுகள் தொடரும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!