×

பாஜவில் இருந்து ஆட்களை இழுக்க எடப்பாடி உத்தரவு: அண்ணாமலையால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு குறிவைக்கும் அதிமுக தலைகள்

சென்னை: பாஜவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்க மூத்த தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை அதிமுகவினர் தொடங்கியுள்ளனர். அதிமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் போக்கு என்பதை விட, எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையில் மோதல்தான் பிரதானமாக இருந்தது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் தங்களுக்குள் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கவே இந்த மோதல் எழுந்ததாக கூறப்பட்டு வந்தது. இப்படி இரு கட்சிகளுக்கான மோதலில் கூட்டணி உடைந்தது. தற்போது சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்களுக்கும் பாஜவுக்கும் இடையே மோதல் இருப்பதுபோல காட்டிக் கொள்ள அதிமுக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் அண்ணாமலைக்கும் பதிலடி கொடுக்க முடிவு செய்து பாஜ மூத்த தலைவர்களை இழுக்கும் முயற்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இதற்கான வேலைகளை மூத்த தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் பாஜவினருக்கு வலை வீசும் படலத்தை தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாகத்தான் ஈரோட்டில் அசோக்குமார் என்ற தொழிலதிபரை பாஜவில் இருந்து இழுத்து அதிமுகவில் சேர்த்துள்ளனர்.

இவர் பாஜ எம்எல்ஏவின் மருமகன். அவர் அண்ணாமலையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் அதிமுகவில் சேர்ந்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். இதேபோல மாநிலம் முழுவதும் பாஜவினரை இழுக்கும் படலத்தை அதிமுக மூத்த தலைவர்கள் தொடங்கியுள்ளனர். அதோடு அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் வலை வீசப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகத்தான் மதுரையில் பலரும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகினர். அதேபோல மேலும் பலரையும் அதிமுகவில் இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

The post பாஜவில் இருந்து ஆட்களை இழுக்க எடப்பாடி உத்தரவு: அண்ணாமலையால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு குறிவைக்கும் அதிமுக தலைகள் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,BJP ,AIADMK ,CHENNAI ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அதிமுக கூட்டணி அமைப்பதில் தாமதம்: எடப்பாடி விளக்கம்