×

இயற்கை முறையில் நெல் பயிரிடுவது எப்படி? விவசாயிகளுடன் ஒருநாள் கலந்துரையாடல் முகாம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், நாபலூர் ஊராட்சிக்கு உட்பட்டது குன்னத்தூர் கிராமம். இங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் நெல் விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து சென்னையில் உள்ள தனியார் விவசாய ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சிக்கு தனியார் ஆராய்ச்சி நிர்வாக மேலாளர் முத்து நாயகம் தலைமை தாங்கினார். களப்பணியாளர் அன்பு வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடராஜன் கலந்துகொண்டு நெல் நாற்று விடுவது முதல் அறுவடை எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கினார். தற்போது நெற்பயிர்களை பல்வேறு நோய்கள் தாக்குவதால் அதற்காக உரங்கள் போட்டு விவசாயம் செய்கின்றனர். இதன் காரணமாக, பல்வேறு நோய்கள் மனிதர்களையும் தாக்கி வருகின்றன.

எனவே இதை தடுக்கின்ற வகையில் தங்கள் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு வகையில் ஆராய்ச்சி செய்து அதன் மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்து கண்டறிந்துள்ளது. அதற்காக ஒவ்வொரு விவசாயிகளும் நெல்மணிகளை விதை நெல்லை விதைக்கும் முன்பாக உயிர் உரம் மூலம் கலக்க வேண்டும். அதன்பின்னர் தண்ணீரில் ஊற வைத்து இடைவெளியுடன் நெல்மணிகளை விதைக்க வேண்டும். இதன் பின்னர் இடைவெளியுடன் நாற்று நடுவதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் 15 தினங்களில் நவீன களை எடுக்கும் இயந்திரம் மூலம் களை எடுத்துவிட்டு கார்பன் போன்ற இயற்கை உரங்களை குறைந்த அளவு யூரியாவை பயன்படுத்தி பயிர்களுக்கு உரம் இடவேண்டும்.

15 தினங்களுக்கு ஒரு முறை பஞ்சகாவியம் மீன் அமிலம் போன்ற இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளை பயன்படுத்தும் போது பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிகப்படியான மகசூல் தரும். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 50 முதல் 60 மூட்டை வரை அறுவடை செய்யலாம் என்று தெரிவித்தார். மேலும் அது சம்பந்தமான ஆலோசனைகளையும் வழங்கினார். இதேபோன்று சிவசங்கரன் குழுக்கள் மூலம் எவ்வாறு இயற்கை உரங்களை தயார் செய்வது, அதை எவ்வாறு விற்பனை செய்வது, அதை தயாரிப்பதற்கு தேவையான வங்கி உதவி கடன் பெறுவது உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கினனர். இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான இயற்கை உரங்களை இலவசமாக தருவதாக தெரிவித்தனர்.

The post இயற்கை முறையில் நெல் பயிரிடுவது எப்படி? விவசாயிகளுடன் ஒருநாள் கலந்துரையாடல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Gunnathur Village ,Nabalur ,Tiruvalangadu Union ,