×

கம்மல் ஓட்டையை அடைக்கும் சிகிச்சையின் போது தவறான மருந்து பயன்படுத்தியதால் காதின் ஒரு பகுதி அழுகி விழுந்தது: தனியார் நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: காதில் உள்ள கம்மல் ஓட்டையை அடைக்க தவறான சிகிச்சை அளித்ததால், காதின் ஒரு பகுதி அழுகி விழுந்தது, என பாதிக்கப்பட்ட பெண், தனியார் நிறுவனம் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை சூளை பெரியதம்பி தெருவை சேர்ந்த சுஷ்மிதா (26) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான், எனது கணவருடன் வசித்து வருகிறேன். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் ‘மூன் பியூட்டி அகடாமி’ என்ற நிறுவனம் காதுகளில் உள்ள அடைப்பை சரிசெய்வது குறித்து வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்து, கடந்த அக்டோபர் 9ம் தேதி அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு, ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.

அதற்கான கட்டணம் ரூ.2,499 செலுத்தினேன். எனது, இரண்டு காதுகளிலும் கம்மல் போட்ட இடத்தில் பெரிய அளவில் ஓட்டைகள் இருந்தது. அதை சரிசெய்ய மூன் பியூட்டி அகடாமி நிறுவன நிர்வாகிகளை அனுகினேன். அதற்கு அவர்கள், சிகிச்சை அளிப்பதாக கூறினர். அதன்படி அவர்கள் காது ரிப்பேரிங் லோசன் என்ற கிரீம் பயன்படுத்த எனக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, ரூ.2500 செலுத்தி அந்த கிரீமை வாங்கி, அவர்கள் கூறியபடி எனது இரண்டு காதுகளின் ஓட்டைகளிலும் பயன்படுத்தினேன். அந்த கிரீம் பயன்படுத்திய ஓரிரு நாளில் இரண்டு காதுகளிலும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து நான், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் கூறியபோது, அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. சரியாகிவிடும் என்று கூறினர். பிறகு காதுகளில் கிரீம் தடவிய பகுதி மட்டும் அழுகி, ஒரு கட்டத்தில் சதை அறுந்து விழுந்துவிட்டது. இதனால் நான் கடந்த அக்டோபர் 25ம் தேதி டாக்டரிடம் சென்று இரண்டு காதுகளை காட்டிய போது, டாக்டர், நான் பயன்படுத்திய கிரீம் தான் காதுகளில் உள்ள சதை அழுகி போனதற்கு காரணம் என தெரிவித்தார்.

இதுகுறித்து உடனே, மூன் பியூட்டி அகடாமி நிறுவன உரிமைளாளரிடம் புகார் அளித்தேன். அதற்கு அவரது கணவர், இனிமேல் இதுகுறித்து பேசக்கூடாது என்றும், மீறி பேசினால், ஆட்களை வைத்து என் குடும்பத்தை காலி செய்துவிடுவேன் என்று மிரட்டினார். எனவே, காதுகளில் உள்ள கம்மல் அடைப்பை சரிசெய்ய தவறான சிகிச்சை மற்றும் மருந்து அளித்த மூன் பியூட்டி அகடாமி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கம்மல் ஓட்டையை அடைக்கும் சிகிச்சையின் போது தவறான மருந்து பயன்படுத்தியதால் காதின் ஒரு பகுதி அழுகி விழுந்தது: தனியார் நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Kammal Ota ,CHENNAI ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...