×

தொடர் மழையால் குளங்கள் நிரம்பின கீழப்பாவூர் பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்

*விவசாயிகள் மகிழ்ச்சி

பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் பகுதியில் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால் கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளம் உள்ளிட்டவை நிரம்பி மறுகால் பாய்கிறது.

இந்த குளங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழப்பாவூர் வட்டார வடபகுதி குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, துவரங்காடு, மகிழ், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதுர், அடைக்கலப்பட்டணம், நாகல்குளம், சிவகாமிபுரம், மேலபட்டமுடையார்புரம், அருணாப்பேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்தாண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் உற்சாகம் அடைந்த விவசாயிகள் நெல் நடவு பணியை துவக்கியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியான தினத்தில் பெய்துள்ளதால் குளங்கள் அனைத்தும் நிரம்பியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிது. இந்த வருடம் நெல் மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

அழுகிய நாற்றுகள்: நெல் சாகுபடிக்கு டிராக்டர் வைத்து நிலங்களில் தொளி அடித்தும், விவசாய கூலி ஆட்கள் மூலம் வரப்பு வெட்டி, நாற்று பாவி, பின்னர் அதை பிடுங்கி நடுவதற்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காததால் வெளியூர் இருந்து ஆட்களை வரவழைத்து சம்பளம், போக்குவரத்து செலவு, களைப்பறிப்பு, உரங்கள் என ஒரு ஏக்கருக்கு ரூ.30000 முதல் 35000 வரை செலவாகிறது.

அதனை மிச்சப்படுத்துவதற்காக கீழப்பாவூர் வட்டார பெருவாரியான விவசாயிகள் தரமான நெல் விதைகளை வாங்கி அதை நன்றாக பக்குவப்படுத்தி, தேவையான இடங்களில் சரியான விதத்தில் தூவுகின்றனர். இதனால் செலவு குறைவதாக கூறுகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்ததால் நிலங்களில் அதிக தண்ணீர் தேங்கி நாற்றுகள் அழுகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறுகால் பாய்ந்த நாகல்குளம்

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து சிற்றாற்றில் நீர்வரத்தினால் கீழப்பாவூர் பெரியகுளம் நிரம்பியது. தொடர்ந்து நெல்லை – தென்காசி சாலை அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள நாகல்குளம் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இந்த தண்ணீரில் அப்பகுதி மக்கள் குடும்பமாக சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

The post தொடர் மழையால் குளங்கள் நிரம்பின கீழப்பாவூர் பகுதியில் நெல் நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Geezhappavur ,Geezhapavoor ,Keezapavur ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...