×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை துணை ராணுவ வீரர், பழங்குடி நபர் சுட்டு கொலை

இம்பால்: மணிப்பூரில் துணை ராணுவ வீரர் மற்றும் பழங்குடி நபரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். மணிப்பூரின் மலை மாவட்டங்களில் வாழும் குக்கிகள் மற்றும் மெய்டீ சமூகத்தினர் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து நடந்து வரும் மோதல்களில் இதுவரை 180 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்களால் மாநிலத்தில் அடிக்கடி பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் பட்டாலியனை(ஐஆர்பி) சேர்ந்த வீரரும், பழங்குடியின நபர் ஒருவரும் காங்க்போக்பி மாவட்டத்தில் உள்ள ஹராத்தோல் பகுதிக்கு நேற்று ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

சிங்டா அணை அருகே வந்த போது, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் திடீரென வாகனத்தை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேரும் உயிரிழந்தனர். இந்த படுகொலையை அடுத்து அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். இன கலவரத்தின் போது இந்த இடத்தில்தான் பழங்குடியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதே போல் இரு குழுக்களுக்கும் இடையே பல முறை துப்பாக்கி சண்டையும் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து குக்கி அமைப்பு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை துணை ராணுவ வீரர், பழங்குடி நபர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை...